Visitors

free hit counter

Saturday 31 January 2015

சொல்ல வேண்டிய கதை-7


சேகரை பார்த்ததும் பயங்கர அதிர்ச்சியும்  கோபமும் அடைகிறான் சத்யா.
அங்கு புல் வெட்டும் கத்திரிக்கோல் ஒன்றை எடுத்து அவனை நோக்கி புறப்படும் பொழுது
அவன் பின் பக்கம் ஒரு குரல் அவனை அழைத்தது. " ஹலோ யாரு நீங்க "

சத்யா திரும்பி பார்க்க அது திவ்யா. திவ்யாவும் இவனை பார்த்து அதிர்ச்சி அடைந்து கத்த முற்படும்பொழுது
கத்திரிக்கோல் கொண்டு அவளை மிரட்டுகிறான். " ஹேய் கத்துன கொன்றுவேன்"

"இந்தா இநத மொபைல உங்கப்பாவுக்கு போன் பண்ணு" என்று அவளிடம் கொடுத்து

" நான் சொல்ற மாதிரி சொல்லு" என்று சத்யா கூற, திவ்யா முதலில் மறுத்து பிறகு சரி என்கிறாள்.

"உன்ன சந்தியாவும் அவள் அண்ணனும் கடத்தி வந்ததாகவும் ஊட்டில வச்சிருக்க தாகவும் சொல்லு" என்று சத்யா சொல்ல சொல்ல திவ்யாவும் அப்படியே சொல்கிறாள்.

திவ்யா சொல்லி முடித்ததும் அவளை தலையில் ஓங்கி அடித்து மயக்கமடைய வைக்கிறான் சத்யா.

அவள் சுடிதாரின் ஷாலை எடுத்து அவள் கையையும் வாயையும் கட்டி பக்கத்தில் உள்ள புதரில் மறைக்கிறான்.

இப்போது சந்தியாவையும் சேகரையும் நோக்கி செல்கிறான்.

சத்யாவை பார்த்ததும் இருவரும் அதிர்ந்து நிற்கிறார்கள்.

சேகர் " நீ எப்டி தப்பி வந்த"

சத்யா"ஏன் செத்துருப்பேனு நெனச்சியா?, ஏன்டா இது மாதிரி லவ் பண்றேன் எனக்கு உதவி செய்யுங்கன்னு சொல்லிருந்தா
என் உயிரை கொடுத்தாவது செஞ்சுருப்பேன், இப்படி துரோகம் பண்ணிட்டியேடா"

சேகர் " எனக்கு வேற வழி தெரில, அதனால உன்ன சிக்க வச்சேன்"

சேகர் பேசிக்கொண்டிருக்கும் போதே அவன் காலில் அந்த கத்திரிக்கோலால் குத்தி விடுகிறான் சத்யா.
சந்தியா அலற அவளையும் தலயில் ஓங்கி அடித்து விட்டு,
சத்யா"இன்னும் கொஞ்ச நேரத்துல உன் மாமனார் வீட்ல இருந்து வருவாங்க அவனுங்க கிட்ட இத சொல்லு"

இருவரையும் ஒரு ரூமில் போட்டு தாழிடுகிறான். சத்யா திவ்யாவை ஒளித்து வைத்த புதரை நோக்கி செல்கிறான்.

சிறுது நேரம் கழித்து அங்கு திவ்யாவின் அப்பாவும் அவர் ஆட்களும் அங்கு வருகிறார்கள்.
வீட்டினுள் நுழைந்து சந்தியாவை பார்த்து,

தி.அப்பா " ஏண்டி கூடவே பழகிட்டு எப்டிடி இநத மாதிரி துரோகம் பண்ண முடியுது உங்களால"

சந்தியா" இல்ல அங்கிள் திவ்யா வந்து...."

தி.அப்பா" ச்சீ, வாய மூடு. எல்லாம் என் பொண்ணு சொல்லிட்டா, இப்போ ஒழுங்கா என் பொண்ணு எங்கேனு மட்டும்
சொல்லுங்க"

சந்தியா" தெரியாது அங்கிள்"

தி.அப்பா" டேய் இவுங்க ரெண்டு பேரையும் அடிச்சி உண்மைய வரவைங்கடா" என்று தன் ஆட்களை பார்த்து கூற,

அவர்கள் இருவரையும் போட்டு அடி பின்னுகிறார்கள்.

மூன்று நாட்களாகியும் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்காத வெறுப்பில் திவ்யா அப்பா, அவர்களை பார்த்து
" இனி உங்கள உயிரோட விடறது தப்பு, என் பொண்ண என்ன பண்ணிங்கன்னு எனக்கு தெரில, ஆனா மூணு நாளாச்சு அவ
உயிரோட இருப்பான்னு எனக்கு தோணல"

"டேய் இவுங்க ரெண்டு பேரையும் கொன்னு பொதச்சிடுங்கடா" என்று தன் ஆட்களை பார்த்து சொல்கிறார்.

அவர்களும் அவரவர் இடுப்பில் உள்ள கத்தியை எடுத்து அவர்களை நெருங்க, திவ்யா அப்பாவுக்கு போன் வருகிறது.

"ஹலோ"

"உன் பொண்ணு சாகுறதுக்குள்ள வந்து காப்பாத்திக்கோ"

" டேய் யாருடா நீ"

"அத உன் பொண்ணுகிட்ட வந்து கேளுடா"

"ஹேய் உன்ன சும்மா விட மாட்டேன்டா"

"அத அப்புறம் பாக்கலாம், இப்போ மூணு நாலா சாப்பிடாம உயிருக்கு போராடுற உன் பொண்ண வந்து பாருடா"

"எங்கடா வச்சிருக்க"

"உன் வீட்டு மாட்டு தொழுவத்துலடா"

என்று சத்யா சொல்லி விட்டு மொபைலை தூக்கி எறிந்துவிட்டு செல்கிறான்.

---முடிந்தது.

Wednesday 28 January 2015

சொல்ல வேண்டிய கதை-6


சத்யா ஓடிக்கொண்டிருக்கும் போதே எதிரில் வந்த துணிக்கடையில் நுழைகிறான்...

தடியன்கள் அவனை அங்குமிங்கும் தேடி வேறு திசை நோக்கி ஓடுகிறார்கள்....சத்யா அப்பா என்று பெருமூச்சு விட்டு
திரும்புகையில் நிஷா அங்கு துணி எடுத்து கொண்டிருக்கிறாள்....

நிஷா கையில் ஒரு துணியை எடுத்து கொண்டு கடைக்காரரிடம்"சார் டிரைல் ரூம் எங்க இருக்கு"

கடைக்காரர்"அதோ அங்க இருக்கு" என்று சைகை காட்ட நிஷா நகர்கிறாள்.
சத்யா அவளை ஒரு உடைந்த ஹெங்கரை எடுத்துகொண்டு  பின் தொடர்கிறான்.
நிஷா  டிரைல் ரூம் சென்று கதவை சாத்த முற்படும் பொழுது, சத்யா இடைமறித்து அவன் கழுத்தில் கூரான ஹெங்கரை
வைத்து அவனும் உள்ளே சென்று கதவை தாழிடுகிறான்.

சத்யா"ஏண்டி என்ன அங்க பிரச்சனைல மாட்டிவிட்டு நீ இங்க சந்தோசமா இருக்கியா, ஒழுங்கா சொல்லு திவ்யா எங்கே?,
என்ன ஏன் இதுல மாட்டிவிட்டிங்க"

நிஷா பயத்துடன்"எனக்கு ஒண்ணும் தெரியாது, இது எல்லாமே சந்தியாவோட அண்ணன் சொல்லித்தான் செஞ்சோம்"

சத்யா"எங்கடி இப்போ அவன்?"

நிஷா"அவரும் திவ்யாவும் நேத்தே ஊட்டி  போய்ட்டாங்க, இப்போ சந்தியாவும் அவுங்கள பாக்கத்தான் போயிட்டு இருக்கா"

சத்யா"ஊட்டில எங்க இருக்காங்க"

நிஷா" எனக்கு தெரியாது"

சத்யா"ஒழுங்கா சொல்லு இல்ல இறக்கிடுவேன்"

நிஷா "ஊட்டில ஒரு காட்டேஜ்ல இருக்காங்க, என்ன கூட நாளைக்கு வர சொன்னங்க" என்று சொல்லி
அட்ரசை சொல்கிறாள்.

சத்யா" உன் மொபைல கொடு"
நிஷா எடுத்து கொடுக்க அவள் தலை முடியை கலைத்து விட்டு இவன் தலையையும் கலைத்து கொண்டு சட்டை பட்டனை
கழட்டி விட்டு திடீரென கதவை திறந்து ஓடுகிறான்.
அங்கு உள்ளவர்கள் அதை பார்க்க இவள் கலைந்த தலை முடியுடன் வெளியில் வருகிறாள்.
அங்கு கூடியிருந்த பெண்களில் ஒருத்தி" ச்சீ, ஒரு இடத்தையும் விட மாட்டேன்ராளுங்க" என்று காரி துப்ப, நிஷாவுக்கு பெரிய அவமானமாகிப் போக கூனிக் குறுகி நிற்கிறாள்...

சத்யா ஊட்டி பஸ்ஸை தேடி ஏறி அங்கு அந்த அட்ரசை தேடி அங்கு செல்கிறான்.
அங்கு சந்தியா ஒருத்தனோடு பேசுவதை மறைந்திருந்து பார்க்கிறான்.
சந்தியாவிடம் பேசிக்கொண்டிருந்தவன் திரும்ப சத்யா அதிர்ச்சி அடைகிறான்.

அது சேகர்!!!

-தொடரும்

Tuesday 27 January 2015

வளைவில் முந்தாதே


உன் இடை
வளைவினை முந்தி

காதல் விபத்தில்
சிக்கிக் கொண்டேன்...

மீதம்


நம் காதலில்
மிச்சமிருப்பது

உனக்காய் நான் கொன்ற
என் காலங்களும்....

எனக்காய் நீ தந்த
உன் நினைவுகளும்....

சொல்ல வேண்டிய கதை-5


சத்யா மெல்ல கண் விழித்து பார்க்கிறான்...
அது ஒரு மாட்டு தொழுவம்.
நாலு அஞ்சு தடியான மனிதர்கள் நிற்கிறார்கள், கூடவே ஒருவர் நாற்காலியில் அமர்ந்தவாறு

"டேய், அவன் முழிச்சிட்டான் இப்போ கேளுங்கடா"

ஒருவன் வந்து" டேய் திவ்யா எங்கடா?"

சத்யா"யாருங்க நீங்க? சத்தியமா எனக்கு அவுங்க எங்கனு தெரியாது"

நாற்காலியில் அமர்ந்திருந்தவர்" நான் தான் திவ்யா அப்பா, ஹாஸ்டலில் எல்லாரும் உன் பேர்தான் சொல்றாங்க,
உன்னையத்தான் திவ்யா லவ் பண்ணதா சொல்றாங்க, மரியாதையா பொண்ணு எங்கனு சொல்லு"

சத்யா " சார், என்ன நம்புங்க எனக்கு ஒண்ணுமே தெரியாது"

"நீ இப்படி எல்லாம் கேட்டா சொல்ல மாட்ட"

"ஹையோ புரிஞ்சுக்கோங்க எனக்கு சந்தியாவதான் நல்லா தெரியும்"

உடனே திவ்யா அப்பா சந்தியாவை அழைக்கிறார்.

தி.அப்பா " சந்தியா, இங்க வாமா"

சந்தியா" என்ன அங்கிள்"

தி.அப்பா" என்னமா இவன் உன்னையாதான் நல்லா தெரியும்னு  சொல்றான்"

சந்தியா" திவ்யாதான் இவன அறிமுக படுத்தி வச்சா, எனக்கு இவன சுத்தமா பிடிக்கல, நான்கூட
திவ்யாகிட்ட அடிக்கடி சொல்லிருக்கேன் அங்கிள், அவதான் கேட்கல"

தி.அப்பா"ஏன்மா இத நீ அப்பவே சொல்லிருந்தா இவ்ளோ நடந்திருக்குமா"

சந்தியா"இல்ல அங்கிள், நான் அப்பவே சொல்லிரலாம்னு தான் இருந்தேன், திவ்யா தான் நீ சொன்ன நான்
செத்துடுவேன்னு மிரட்டுனா...அதான்...."

தி.அப்பா"சரிமா, நீங்க ஹாஸ்டலுக்கு போங்க...நான் பாத்துக்கிறேன்"

சந்தியா"சரி அங்கிள்"

சந்தியா சொல்லிவிட்டு கிளம்பி செல்கிறாள்.
தி.அப்பா" டேய் தம்பி, நீ உண்மைய சொல்லல சாகமாட்ட, ஆனா சாகுற வரை வலிக்கும். பாத்துக்கோ"

சத்யா " சார்,  புரிஞ்சிக்கோங்க எனக்கு எதுமே தெரியாது"

தி.அப்பா" நீ சரிபட்டு வர மாட்ட"   சற்று திரும்பி தடியன்களிடம்,

தி.அப்பா" டேய், நான் போய் கமிஷனரை பாத்துட்டு வரேன், அதுக்குள்ள உண்மைய வரவைங்கடா"

சொல்லிவிட்டு கிளம்ப, அவர்கள் சத்யாவை நோக்கி செல்கிறார்கள்.

சத்யா " பிளீஸ், என்ன விட்டுடுங்க எனக்கு ஒண்ணும் தெரியாது"

அவர்கள் சத்யாவை போட்டு அடிக்கிறார்கள்..

சத்யா மீண்டும் மயங்கி விடுகிறான்.

சத்யா மனதில் " திவ்யா கிடைக்குற வர என்ன கொல்ல மாட்டாங்க, ஆனா தினமும் இந்த இம்சைய
அனுபவிக்கனும், அதுக்கு பதிலா நாம திவ்யா கண்டு பிடிச்சி உண்மைய தெரிஞ்சுக்கணும், அதுக்கு
நாம இங்கிருந்து தப்பிக்கணும்" என்று முடிவெடுத்து எழுந்து ஓட ஆரம்பிக்கிறான்.

அவன் மயங்கிவிட்டான் என்று நினைத்து மிதப்பாக இருந்த தடியன்களும்
சத்யாவை துரத்த ஆரம்பிக்கிறார்கள்...

-தொடரும்

Sunday 25 January 2015

சொல்ல வேண்டிய கதை-4


சில சந்திப்புகளுக்கு பிறகு...

மீண்டும் சந்தியாவை பார்க்க சத்யா புறப்படுகிறான். அப்பொழுது சேகர் இடைமறித்து,
"என்ன சார் இப்போலாம் அடிக்கடி அந்த பொண்ண பாக்க போறீங்க, என்ன லவ்வா"

சத்யா " ச்சீ, அதெல்லாம் இல்ல எனக்கும் யாருமில்ல, ஒரு ஆறுதலுக்கு பாக்க போறேன், அவ்ளோதான்,
நீ தப்பா நெனைக்கிற அளவுக்கு ஒண்ணுமில்ல. அதுமில்லாமே நாம அந்த மாதிரி பழகுனா தப்பா நெனைக்க
மாட்டாங்க."

சேகர்"அப்புறம் அடிக்கடி உங்கள பாக்க வேண்டிய அவசியமென்ன"

சத்யா"ஏன்? ஒரு நல்ல சினேகிதமா இருக்க கூடாதா?"

சேகர் " எல்லாம் சரி, ஆனா கடைசி வரை ஒரு பொண்ணும் ஆணும் நண்பர்களாகவே இருக்க முடியாது"

சத்யா " நாங்க இருக்க ட்ரை பண்றோமே"

சேகர் "சார், நீங்க இருப்பிங்க, அவளுக்கு கல்யாணம் ஆகிட்டா அவளுடைய வீட்டுக்காரர் ஒத்துக்கணுமே"

சத்யா "அப்போ பாக்கலாம், இப்போ ஆள விட்றியா டைம் ஆச்சு"

சேகர் " ஓகே சார் பாத்து பத்தரமா போயிட்டு வாங்க"

சத்யா"சரி சரி " என்று சொல்லி பஸ் ஏறி சென்றான்.

ஹாஸ்டலில்,

சந்தியா" எப்படியோ இத்தன நாளா பிளான் பண்ணது இன்னைக்கு முடிவுக்கு வரப்போகுது"

நிஷா " ஆமாண்டி, உங்கண்ண சொன்ன மாதிரி, திவ்யா சத்யான்ர பையன லவ் பண்றமாதிரி ஹாஸ்டல் பூராம்
பரப்பி விட்டாச்சு, இப்போ அவ ஆள் இல்லைனாலும் அவனோட ஓடி போன மாதிரி ஆகிடும்"

சந்தியா " அதனால தானே நேத்தே எங்கண்ண கூட அவள் அனுப்பி வச்சிட்டு, திவ்யா அப்பாவுக்கும் அவ வரலைன்னு
போனும் பண்ணியாச்சு, இப்போ சத்யா வரதையும் சொல்லியாச்சு, இனி அவனாச்சு அவுங்கலாச்சு நமக்கென்ன,
திவ்யா இப்போ சந்தோசமா எங்கண்ண கூட வேற ஊருக்கு போயிட்டு இருப்பா"

நிஷா " ஓகே டி இப்போ நாம என்ன பண்றது."

சந்தியா "வா பஸ் ஸ்டாண்டுக்கு போகலாம், அவன் வந்துட போறான்"

இருவரும் சேர்ந்து பஸ் ஸ்டாண்டுக்கு கிளம்பி சென்றனர்..

பஸ் ஸ்டாண்டில்,

சத்யா பஸ்ஸை விட்டு இறங்கி சந்தியாவின் அருகில் செல்கிறான்.

சத்யா" ஹலோ சந்தியா, இன்னைக்கு என்ன ரெண்டு பேர்தான் வந்துருக்கீங்க, திவ்யாவ ஆளக் காணோம்"

சந்தியா "நடிக்காதடா, திவ்யா எங்க இருக்கானு சொல்லு"

சத்யா அதிர்ச்சி அடைகிறான்.
"என்ன சொல்றிங்க, திவ்யாவ பத்தி எங்கிட்ட கேட்டா எனக்கென்ன தெரியும்."

நிஷா "டேய் அவள கொண்டு போய் நீதான் எங்கேயோ வச்சிட்டு, இங்க வந்து தெரியாத மாதிரி நடிக்கிற"

சத்யா "ரெண்டு பேரும் என்ன சொல்றீங்க, எனக்கொண்ணுமே புரியல"

சத்யா பேசிட்டு இருக்கும்போதே அவன் தலையில் யாரோ ஓங்கி அடிக்க நிலைகுழைந்து சரிந்து
கீழே விழுகிறான்...

-தொடரும்

முதல் இரவு


பசியோடு இதழும்
உன் உயிரில் உலவும்,
காதல் போரில் காமம்
வெல்லும் காதலியே...
காற்றில் கூட கள்
வடியும் கண்மணியே...

உன் முத்த தேனும்
என் உடலில் வழியும்,
விரதம் முடித்து விரகம்
எடுக்கும் நேரமிது...
உயிரை உருக்கி உனக்கு
கொடுக்கும் காலமிது...

விடியாத இரவும்
விலகாமல் இருக்கும்,
கடவுள் கொடுத்த கலவி
முழுதும் கால் பதிப்போம்...
உயிரை துளைத்து உயிரை
படைக்க சூள் உரைப்போம்...

நிலவாக நீயும்
ஒளியாக நானும்
ஒன்றாக இணைய
காதல் வந்து
வரம் கொடுக்க...

என் வாழ்க்கை நீதானே


வந்ததொரு கருவறையில்
போவதொரு கல்லறையில்
வாழ்க்கை என்பதுன்
இதய அறையிலே...

உன்னை தேடி வருகிறேன்
எனை ஏங்க விடுகிறாய்...

நீ விலகி சென்று என்
உயிரை கொல்கிறாய்...

ஒரு பார்வை மட்டும் போதும் தேவி
உன்னை சுற்றும் ஆவி...

என் மனைவி


அன்னைக்கு ஆதரவாய்
அழைத்து வந்தேன்
அன்னைக்கு அன்னையாய்
நீ இருந்தாய்...

கதிரவன் எழும்முன்
நீ எழுந்து
கதிரவன் ஒளிந்த பின்னும்
நீ ஓயாமல்
உழைத்து கொண்டிருக்கிறாய்
அடுப்பங்கரை அனலில்....

மகனை பெற்றெடுத்து அவனுக்காய்
பேரனை பெற்றெடுத்து அவனுக்கும்
இரவு வேளைகளில் என்னுடனும்
உன் காலங்களை செலவு செய்கிறாய்
உனக்காக ஏதுமில்லாமல்....

வேலைக்கு போகும் எனக்கு
பணிக்கால ஓய்வு உண்டு...
நீயோ ஓய்வின்றி
ஓடாய் தேய்கிறாய்...

அதனால் தான்
நான் இன்னும்
கடவுளை தேடுவதில்லை
நீ என்னருகில் இருப்பதால்...

Saturday 24 January 2015

சொல்ல வேண்டிய கதை-3


சத்யா பஸ்ஸை விட்டு இறங்கி அவர்களை நெருங்கி சென்றான்...

சத்யா" ஹாய் சந்தியா, எப்படி இருக்கீங்க"

சந்தியா " நல்லா இருக்கேன், நீங்க?"

சத்யா " நல்லா இருக்கேன், நீங்க வரமாட்டிங்கனு நெனச்சேன்"

சந்தியா "அதுதான் வந்திட்டேன்னே, அப்புறம் இவங்க என்னோட பிரண்ட்ஸ், இவ திவ்யா இவ நிஷா "

சத்யா "ஹாய்"

திவ்யா மற்றும் நிஷா ஒருசேர "ஹாய்"

சத்யா "வாங்க எதுனா சாப்பிட்டு கிட்டே பேசலாம்"

சந்தியா "சரி, வாங்க அந்த கூல்டிரிங்க்ஸ் கடைக்கு போகலாம்"

நால்வரும் கடைக்குள்ளே சென்று சிறுதுநேரம் பேசிவிட்டு வெளியில் வருகின்றனர்"

சந்தியா "சரி, இனி அடிக்கடி பாப்போம், இப்போ எங்களுக்கு ப்ராஜக்ட் விஷயமா பிரிண்ட் எடுக்கிற வேல இருக்கு"

சத்யா "ஓகே, நான் கிளம்புறேன்"

சத்யா சொல்லி விட்டு பஸ் ஏறி  செல்கிறான்.

சந்தியா "இவன் ரொம்ப வழியிராண்டி, இவன்தான் நம்ம விஷயத்துக்கு கரெக்டா இருப்பான்"

திவ்யா"பாவம்டி, வேணாம்டி"

நிஷா"ஹேய் திவ்யா, உனக்காகவும் சந்தியாவோட அண்ணனுக்காகவும் தானே இதெல்லாம் செய்ரா"

சந்தியா " திவ்யா, எங்கண்ணே சொன்ன மாதிரி தானே எல்லாம் பண்றேன். நீங்க நல்லா இருக்கணும்னா
இதெல்லாம் செஞ்சு தான் ஆகணும். உங்கப்பாவ மீறி கல்யாணம் பண்ணா எங்கண்ணன சும்மா விட்ருவாரா
உங்கப்பா, புரிஞ்சிக்கோ"

திவ்யா "சரிடி, இருந்தாலும் வேற ஏதும் பிரச்னை வந்துடாதா?"

சந்தியா "எங்கண்ணே தெளிவா சொல்லிட்டான், இவனுக்கு சொந்தம்னு சொல்லிக்க யாருமில்ல, ஏதோ ஒரு
ஆசிரமித்துல படிச்சு இங்க வேலைக்கு சேர்ந்துருக்கான். அதனால இவனுக்கு என்ன நடந்தாலும் இவன தேட ஒருத்தன்
வரமாட்டான்.அதனால நம்ம வேல ஈசியா முடிஞ்சிடும்."

நிஷா" சரிடி வாங்க போகலாம் இன்னும் நமக்கு கொஞ்சம் வேல பாக்கி இருக்கு"

சந்தியா " ஆமாம்டி, வாங்க"

மூவரும் சேர்ந்து ஹாஸ்டலுக்கு திரும்புகிறார்கள்...

-தொடரும்

சொல்ல வேண்டிய கதை-2


ஹாஸ்டலில்,

சந்தியா மற்றும் சந்தியாவின் தோழிகள் பேசிக்கொள்கிறார்கள்.
சந்தியா "திவ்யா இன்னைக்கு அந்த சத்யா என்ன பாக்க வரான்டி. அவன எப்டியாவது நம்ம
வலைக்குள்ள சிக்க வைக்கணும்டி "

சந்தியாவின் தோழி நிஷா " ஆமாம் திவ்யா அப்பதான் உன் ரூட்டு கிளியர் ஆகும் "

திவ்யா " வரவன் எப்டின்னு தெரிலையேடி"

சந்தியா " அவன் கண்டிப்பா இளிச்சவாயனா தான் இருப்பான், ஒரு பொண்ணு போன் பண்ணா வந்துடறதா"

நிஷா " கண்டிப்பா அலையுறவனா தான் இருக்கும்"

திவ்யா " எனக்கென்னமோ பயமா இருக்குடி"

நிஷா " உனக்காகதானடி சந்தியா இதெல்லாம் பண்றா"

திவ்யா "இருந்தாலும்....."

சந்தியா "விடுடி நான்தான் இருக்கேன்ல"

சந்தியா "சரி வாங்க போகலாம் அவன் வந்திட போறான்"

மூவரும் கிளம்பி பஸ் ஸ்டேண்டுக்கு போகிறார்கள்..

சத்யா பஸ் விட்டு இறங்குகிறான்...

அவனை பார்த்து மூவரும் அவனருகில் செல்கிறார்கள்...

-தொடரும்

Thursday 22 January 2015

சொல்ல வேண்டிய கதை-1


"சார் ஆர்குட்ல நெறைய பேக் ஐடி இருக்கு, நீங்க நம்பி போன் நம்பர் கொடுக்காதிங்க,
பசங்க கலாய்ப் பானுங்க." சேகர்

" விடு சேகர் நமக்கு கலாய்க்க தெரியாதா, இந்த பொண்ணு போட்டோலாம் போட்டுருக்கு,
யாருன்னு தான் பாக்கலாம்" சத்யா.

சத்யா MBA படிச்சிட்டு HR வேல பாக்குறான்...அவனோட பொழுது போக்கே சாட்டிங் தான்..
சேகர் சத்யாவோட அசிஸ்டண்ட்..தினமும் இவர்களுக்கு இது தான் வேலை..அப்படி தான் இன்று
ஒரு பெண் சாட்டிங் வரவும் அவனுடைய போன் நம்பரை கொடுக்கிறான்..

சத்யாவிற்கு இரவு ஏழு மணிக்கு ஒரு போன் அழைப்பு வருகிறது...
" ஹலோ யாரு பேசுறது" சத்யா

"நான் சந்தியா பேசுறேன், நீங்க சத்யா தானே"

"ஆமாம், என்ன விஷயம் சொல்லுங்க "

"என்னங்க, காலைல நீங்க தானே நம்பர் கொடுத்து பேச சொன்னிங்க"

"ஓ! நீங்கதானா, என் நண்பன் உங்க ஐடி பேக்னு சொன்னான்"

"அதெல்லாம் இல்ல, பசங்களோட டைம் லைன பாத்துட்டு முடிவு பண்ணிட்டு தான் பேசுவோம்.
உங்க ஐடி நல்லா இருந்தது. அதான் பேசுனேன். அப்புறம் என்ன பண்றீங்க"

" நான் ஒரு பிரைவேட் கம்பெனில HR  வேல பாக்குறேன். நீங்க?"

"கோவைல ஒரு ஹாஸ்டலில் தங்கி நர்சிங் படிக்கிறேன்"

"எந்த ஹாஸ்டல்"

"எதுக்கு"

"சும்மா தெரிஞ்சிக்கலாம்னு தான்"

"அந்த அளவுக்கு நாம பழகல. நல்லா பழகுனதுக்கு அப்புறம் பாக்கலாம்"

"சரி விடுங்க"

"சரி நானே கூப்டறேன், எதுனா மெசேஜ் மட்டும் அனுப்புங்க, ஹாஸ்டலில் போன் வச்சுக்க கூடாது,
நான் சைலன்ட்ல போட்டு வச்சிருப்பேன். நான் அப்புறம் பேசுறேன்"

"சரிங்க" சத்யா.

மறுநாள் சேகரிடம் சத்யா போன் வந்ததை பற்றி கூறுகிறான்.
"சார், நெஜமாவா என்னால நம்பவே முடில" சேகர்.
"நான் அப்பவே சொன்னேன்ல அந்த பொண்ணு போட்டோலாம் போட்டுருக்குனு.பேக் ஐடினு சொன்ன"சத்யா.
"சார், இருந்தாலும் பாத்து நடந்துக்கோங்க"சேகர்.
"அதெல்லாம் பயப்பட வேண்டியதில்ல, ஒரு பொண்ணே பயமில்லாம போன் பண்றா, நமக்கென்னடா"சத்யா.

சில நாட்களுக்கு பிறகு, சந்தியாவை சந்திப்பதாக முடிவு செய்து கோவை கிளம்பி செல்கிறான் சத்யா.

---தொடரும்

Wednesday 21 January 2015

என் கண்ணில் விழுந்தாய்


கொட்டுகின்ற
மழையாய் விழுந்தாய்
எனை சட்டென்று
உன்பக்கம் இழுத்தாய்

கண்ணில் பார்க்கும்
காட்சி எல்லாம்
உன்முகம் தெரியுதடி...
உன்னில் விழுந்து
என்னை தொலைத்தேன்
உயிரே இனிக்குதடி..

கற்சிலை போலே கிடைத்தாய்
எனை பட்டென போட்டு உடைத்தாய்

உன்னாலே எங்கோ தொலைத்து
எங்கோ தேடுகிறேன்
என் கண்ணில் விழுந்தாய்
கனவை நாடுகிறேன்..

காதல் பார்வை


சூதகம் ஆனேன்
உன் சூசகப்
பார்வையில்...

வா
முத்த மழையில்
நீராட்டி விட...

காதல் விதை


நீ
உன் மகனை
என் பெயர் சொல்லி
அழைத்த போதுதான் தெரிந்தது
நம்மில் புதைக்கப் பட்ட காதல்
உன்னால் மீண்டும் விதைக்கப்
பட்டிருக்கிறது என்று!....

தேவதை சரணாலயம் - 5


உனக்காய் படைக்கப்பட்ட
கவிதைகள் கூட
உன்னை காதலிக்க
ஆரம்பித்து விட்டன போலும்!!
உன் பெயரை மட்டுமே
எழுத சொல்லி
கெஞ்சுகிறதே...
---------------------------------------------------------------------------------------------
நீ பேச
வேண்டிய
வார்த்தைகளை
கண்களால் பேசியதால்
உன் இதழ்கள்
முத்தங்களால்
பேசின....
----------------------------------------------------------------------------------------------
உன் அழகில்
மயங்கி விழுந்த எனக்கு
நிவாரணம் தான்
உன் முத்தம்...
----------------------------------------------------------------------------------------------
என்
தலையெழுத்தின்
பிழைகளை சரி செய்த
பிரம்மதேவி நீ...
----------------------------------------------------------------------------------------------
உன் கள்
பேச்சை பருகும்
மோசமான
குடிகாரன் நான்....
----------------------------------------------------------------------------------------------

எங்கே விட்டு சென்றாய் அன்பே


கனா காணும்
என் இரவினில் தேடுகிறேன்
மழை தரும்
என் கண்களில் தேடுகிறேன்
உன்னை எண்ணும்
என் நெஞ்சத்தில் தேடுகிறேன்
உயிர் கொன்ற
என் வலிகளில் தேடுகிறேன்

கண்ணே ஒரு நாள்
மரணம் தழுவும்
அதனால் வருந்தவில்லை...
உன்னை காணும்
இன்பம் வரையில்
சாவில் விருப்பமில்லை...

பிரிவு என்ற ஒன்றே இன்றி
என்னை வாழவிடு...
அழியும் உலகில் அழியா காதல்
அன்பே தந்துவிடு...

சாதி ஒழி மதம் அழி சாதி -பொங்கல் கவிதை


முதல்நாள் போ(க்)கிப் பண்டிகை :

சாதி மதத்தினை அறுவடை செய்
எண்ணத்தில் தேங்கிப் போன
சாதி மதக் குப்பைகளை அப்புறப்படுத்து
உன்மனம் புதுப் பொழிவுடன் தோன்றட்டும்

இரண்டாம் நாள் தைப்பொங்கல்:

சாதிமத அரக்கனை அழித்ததற்கு வெடிகளை
வானம் முழுதும் வெடித்து நிரப்பு
பொங்கலுக்கு இட்ட தீயில்
சாதியும் மதமும் கருகிப் போகட்டும்

மூன்றாம் நாள் பட்டிப் பொங்கல்:

சாதியையும் மதத்தையும் கட்டிப் போட்ட
தொழுவத்தை சுத்தப் படுத்து
சாதியும் மதமும் கழிவுநீராய் போகட்டும்
சாதி மத காளைகளை
மறத் தமிழன் போல் அடக்கி விடு

நான்காம் நாள் காணும் பொங்கல்:

சாதிமத பிரச்சனைகளை உரக்க கூறு
நாளைய சமுதாயமும் விட்டொழிக்கட்டும்.
இன்பங்கள் காணட்டும்.

தேவதை சரணாலயம் - 4


உன் தாயழகில்
ஏங்கி தவிக்கும்
சிறு குழந்தை நான்..
-------------------------------------------------
நீ என்னை
என்ன செய்யலாம்
என்று பார்க்கும்
பார்வையிலேயே..

என்னை
என்னென்னமோ
செய்து விடுகிறாய்
-------------------------------------------------
உன் முத்த சூட்டில்
செத்துப் போகும்
என் காதலுக்கு
மௌன அஞ்சலி தான்
உன் இரண்டாவது முத்தம்...
-------------------------------------------------
உன்
நிர்வாண இதழ்கள்
அணிந்து கொள்ளும்
புன்னகையில்
என் காமம்
காதலாகிப் போனது..
--------------------------------------------------

காதல் பூகம்பமே


எதுவும் செய்யாமலே
மனசுக்குள் ஏதோ நடக்குது
விவரம் தெரியாமலே
கண்களும் உன்னை தேடுது
வார்த்தை இல்லாமலே
மௌனங்கள் ஏதோ பேசுது
ஒன்றும் புரியாமலே
இதயமும் உன்னை சுமக்குது

காதல் பூகம்பமே
எனை ஆளும் சொப்பணமே
வாழ்க்கை பக்குவமே
எனை வாழ்த்தும் அற்புதமே

உயிராய் வந்தாயே
உள்ளுக்குள்ளே புது ஆனந்தமே...

தேவதை சரணாலயம் - 3


கோவில் மாடங்களில்
தங்கிப் போகும்
புறாவைப்போல
நானும் உன் இதயத்தில்
தங்கி விட்டு
போகிறேனே?...
----------------------------------------------------------------
நான்
கண்ணாடி முன் சொல்லி
ஒத்திகைப் பார்த்த
என் காதல்
உன் முன்னே வந்ததும்
உடைந்து
நொறுங்கி போனது...
---------------------------------------------------------------
நீ விழுங்கும்
எச்சிலில் தெரிந்தது
எனக்காய்
மறைக்கப்பட்ட
உன் காதல்.....
---------------------------------------------------------------
எறும்பு சேமித்தது
மழை காலங்களில்
உயிர் வாழ உதவுவது போல
நீ என்னை விட்டு
பிரிந்து செல்கையில்
உன் நினைவுகள்
நான் வாழ
உதவுகின்றன...
--------------------------------------------------------------

தேவதை சரணாலயம் - 2


கருப்ப சாமிக்கு
நேர்ந்து விட்ட
ஆட்டைப் போல
நான் உனக்காக
நேர்ந்துவிட்டவன்.
-----------------------------------------------------------------
உனக்கு பிடித்த
எல்லாவற்றையும்
நானே தேர்ந்தெடுத்தேன்
என்னை மட்டும்
தேர்ந்தெடுக்கும் உரிமையை
உன்னிடமே
விட்டுவிட்டேன்..
-----------------------------------------------------------------
நீ திட்டும்
முட்டாள் என்ற
வார்த்தைக்காகவே
நான்
முட்டாளாய்
பிறந்திருக்கலாம்.
----------------------------------------------------------------
நீ
மெய்மறந்து கேட்கும்
ஒவ்வொரு இசையிலும்
என் காதல்
கசிந்துக் கொண்டுதான்
இருக்கிறது...
----------------------------------------------------------------
நீ யாருக்கோ செய்த
அர்ச்சனையில்
வாய்தவறி
என் பெயரை கூறிவிட்டு
நாக்கைக் கடிக்கும் போதுதான்
தெரிந்தது ...
நீயும் என்னை காதலிக்க
ஆரம்பித்து விட்டாய் என்று....
-----------------------------------------------------------------

தேவதை சரணாலயம் - 1


என்றோ நீ வீசிய
பார்வைக்காக
இன்றும் உன்னை
சுற்றிக்கொண்டிருக்கிறது
என் காலம்
உன் காதலுக்காக...
--------------------------------------------------------------
உன் அளவிற்கு
எனக்கு இம்சிக்க தெரியாது
காதலிக்க மட்டுமே
தெரியும்
--------------------------------------------------------------
ஒரு முத்தம் கொடுத்து
என்னை மொத்தம்
கடத்தி சென்றாய்
மிச்ச முத்தத்திற்கு
நான் என்னாவேனோ?
--------------------------------------------------------------
உன் காதலை
சுருக்கமாய்
சொல் என்றாய்
நானோ
உன் பெயரை மட்டும்
ஒப்புவித்து சென்றேன் ...
--------------------------------------------------------------
நீ
காதல் சொன்ன
அந்த நாளைத்தான்
என் பிறந்தநாளாய்
கொண்டாடி
கொண்டிருக்கிறேன்
---------------------------------------------------------------
மரண தேதி
யாருக்கும் தெரியாதாம்
நீ பிரிகையில்
எனக்கு தெரிகிறதே
--------------------------------------------------------------
நீ
அடிக்கடி வரவேண்டாம்
அவ்வப்போது வந்துபோகும்
ஒரு சரணாலய மாகவாவது
இருக்கட்டுமே
என் இதயம்...
--------------------------------------------------------------

என்னவளே


உன் கடைக்கண்
பார்வை பட்டாலே
அதுவே போதும்

நீ சிந்தும்
புன்னகையில்
விழுந்தால் போதும்

உன் நினைவோடு
என் காலம்
சென்றால் போதும்

உன் நெஞ்சாங் கூட்டிலே
வாழ்ந்தால் போதும்...

தீண்டலில் ஓர் மென்மை
காட்டிடிடும் ஓர் பெண்மை

முத்தங்களை தந்து விட்டு
உயிர் எடுடி உன்னிடத்து...

Tuesday 20 January 2015

எங்கு சென்றாய்


கருப்பு வெள்ளை
வாழ்க்கையிலே
வண்ணங்கள் நீயே தந்தாய்..
வசதியின்றி
வாழ்ந்திருந்தேன்
மனதளவில் உயர வைத்தாய்

நீ சொல்லாமலே எங்கு சென்றாய்
உண்மை சொல்லாமலே வலி தந்தாய்

பெண்ணே பெண்ணே
நீயும் எங்கே
தேடி இங்கு அலைகிறேன்

பெண்ணே பெண்ணே
விட்டு சென்றாய்
காதல் இன்றி தொலைகிறேன்

நீ சொல்லாததால்
வழி இல்லை..
உன்னை காணாததால்
உயிர் இல்லை..

நான் வாழ்கின்ற
வாழ்க்கைக்கு
அர்த்தங்கள் தந்தவள்
நீதானே என்றேன் அன்பே!.

காதல் பெற்றேன்


உன் வாசங்களே
எந்தன் வாழ்வின்
மூச்சுக்காற்று
தினம் அதை தந்து
என்னை
வாழ வைப்பாய்

உந்தன் பார்வைகளை
வேண்டி ஏங்கும்
பக்தனானேன்
மோட்சம்தனை
தந்து என்னை
சாகடிப்பாய்

உன் நினைவுகளை
நிறுத்திவிட்டால்
உயிருடன் என்னை
புறக்கணிப்பேன்...
என் இதயத்திலே
உன் பெயரை
அடிக்கடி நானும்
துடிக்க வைப்பேன்...

காற்றினில் ஆடிடும்
உந்தன் ஆடை
எந்தன் பெட்டியில்
பொக்கிஷம்
என வைப்பேன்...
தேவதை நீ
சொல்லும்
ஒரு வார்த்தை
மூளைக்குள்
நான் வைத்து
அதை தைப்பேன்...

ஏனடி பெண்ணே
இங்கு வந்தாய்!
காதலை தந்து
என்னை வென்றாய் ...

காதல் திருவிழா


நீ
கோவிலை ரசித்தாய்
கோவில் சிலைகளோ
உன்னை ரசித்தன..
---------------------------------------------
நீ
தேர் உலா
காண வந்தாய்
நானோ உன் உலா
காண வந்தேன்
----------------------------------------------
ஊர் கூடி
தேர் இழுத்தது
உன் நினைவுகள் கூடி
என்னை இழுத்தன.
----------------------------------------------
குழந்தைப் போல்
நீ உண்ணும்
பனிக்கூழிலில்
நானும் சேர்ந்து
கரைகிறேன்
----------------------------------------------
நீ
ராட்டினம் சுற்றி
இறங்கிப்போகிறாய்
நானோ
தலை சுற்றி
கிறங்கி விழுகிறேன்.
----------------------------------------------
வளையல்காரன்
உன் கைப்பிடித்து
இட்ட வளையளுக்காக
நான் இங்கு
உடைகிறேன்
-----------------------------------------------
நீ
சென்றதும்
கோவிலே வெறிச்சோடி
காணப்பட்டது.

உன் அடுத்த வருட
வருகைக்காக
நானும் கோவிலும்
தவம் இருக்கலானோம்...
-----------------------------------------------

காதல்


கண்ணும் கண்ணும்
பேசிக்கொள்ளும்
உலகம் எல்லாம்
பொய்யாய் தோன்றும்
காதல்....

உன்னை மட்டும்
நினைத்துக்கொள்ளும்
உயிரை கூட
தூக்கி வீசும்
காதல்....

ஊரென்ன...
பேரென்ன...
மதமென்ன...
குலமென்ன...
பார்த்திடாது இந்த
காதல்....

காதலுக்கு
உருவமில்லையே
அது வரங்கள் தரும்
கடவுள் போலவே..

காதல் வந்தது


உன்
நீளக் கூந்தல்
பிடிக்கவில்லை

உன்
கழுகுப் பார்வை
பிடிக்கவில்லை

உன்
பூக்கும் புன்னகை
பிடிக்கவில்லை

நீ
பேசும் வார்த்தைகள்
பிடிக்கவில்லை

நீ
நடக்கும் நடையும்
பிடிக்கவில்லை

என்னை
கடந்து போவதும்
பிடிக்கவில்லை

ஆனால்
எப்படி என்னுள்
காதல் வந்தது!...

எப்பொழுது


விழிகள்
வடித்திடும் கண்ணீருக்கு
விடியல் எப்பொழுது?

மௌனம்
கலைத்து போகும்
வார்த்தை எப்பொழுது?

உறக்கம்
கெடுக்கப் போகும்
கனவு எப்பொழுது?

என்னை
மறந்து போகும்
நினைவு எப்பொழுது?

என்னை
உருக்கிப் போகும்
முத்தம் எப்பொழுது?

உள்ளம்
கொள்ளைப் போகும்
காதல் எப்பொழுது?

அத்தனைக்கும்
ஆசைப்பட்டேன் பெண்ணே!..
நீ என்னை
வந்து சேரும்
நாளும் எப்பொழுது?

காதல் பிரிவின் வலி


ஏதோ மனதிலே
காதல் வலிகளே
நீயா தருவது
உயிரை கடைவது

வார்த்தை ஒன்று
வீசி சென்றாய்
ஊமையாய் நிற்கிறேன்
காதலுக்குள் பூகம்பமா?
ஏனோ யோசிக்கிறேன்

உயிரே
என் உயிர் உனதே
நீ விலகுகிறாய்
என் விழி வழியே

தனியே
நான் புலம்புகிறேன்
உன்னை வினவுகிறேன்
எனை வெறுப்பது ஏன்?

மிக மிக ஆழமாய்
காதல் விதைத்தது நீயடி
மிக மிக கோரமாய்
இன்று அறுப்பது ஏனடி

ஊடல் கொண்டாடினால்
கூடல் உண்டாகிடும்
காதல் துண்டாகினால்
நெஞ்சம் என்னாகிடும்

நீயோ பிரிகிறாய்
நானோ உடைகிறேன்

நாமோ சேர்ந்திட
தினம் ஏங்கினேன்...

காதல் வந்ததும்


முள்ளென இங்கு
இருந்தவன்
உன்னால் பூக்களாகி
போனேன்

கல்லென இங்கு
வாழ்ந்தவன்
இன்று கடவுளாகிப்
போனேன்

என்னை
என்ன செய்தாய்
உள்ளம்
கொள்ளை செய்தாய்

உன்னை எண்ணி
மட்டும் வாழ்கிறேன்

தேவதை தரிசனம்
வேண்டுமே தினம் தினம்

காதல் சிறை ஒன்று
உன்னில் உள்ளதே
அதில் அகப்பட
நெஞ்சம் ஏங்குதே

என்னை உடன் வந்து
கைது செய்யடி
ஆயுள் முழுவதும்
அடைத்து கொல்லடி...

மூட நம்பிக்கை


உன் இதயம்
கல் என்று தெரிந்தும்
உன்னை எண்ணி
எண்ணிச் சாகும்
இந்த காதலும்
ஒரு மூட நம்பிக்கையே...

காதலில் விழுந்தேன்


உன் இதழ் முத்தம் தனில்
நான் நனைய வேண்டும்
உயிரும் உருகிட வேண்டும்

உன் ஓர விழிப் பார்வை
என்னை தீண்ட வேண்டும்
அந்நொடி நான் சாகவேண்டும்

உன்னை
நான் கண்ட நேரத்தில்
என்னை
நானிங்கு தேடினேன்

உன்னில்
நான் என்னை கண்டதும்
உந்தன்
வாசத்தை சுவாசித்தேன்..

Monday 19 January 2015

மரணமே சிறந்தது


நீதான் அன்பே
காதல் தந்தாய்
காதல் தந்து
நெஞ்சம் கொய்தாய்

எந்தன் வாழ்க்கை
நீயே என்றேன்
என்னை ஏனோ
விட்டு சென்றாய்

காதல் வலி தந்தாய்
ஏன் என நான் நொந்தேன்

உயிரை எடு
உலகமே வெறுத்தது
பிரிவை விட
மரணமே சிறந்தது...

பேரழகி


நடக்கும் நடையினில்
என்னில் உடைகிறேன்
உந்தன் இடையினில்
என்னை இழக்கிறேன்
உரசிப் போகிடும்
ஆடைதனில்
எந்தன் ஆயுள்
கரைக்கிறேனே!..

பார்க்கும் பார்வையில்
ஆசை பதிக்கிறாய்
சிரிக்கும் சிரிப்பினில்
உயிரை பறிக்கிறாய்
காதல் கொடுத்தென்னை
காவு கேட்கிறாய்
வாழ்க்கை இனித்திடுதே..

உந்தன் விழி இங்கு
தூண்டில் முள்ளாய்
என்னை இழுக்கிறதே
பிறந்த பலனை
அடைந்தது போலே
உள்ளம் குதிக்கிறதே

உந்தன் அழகினிலே
தினமும் செத்து பிழைத்தேனே...

உலகம் மறக்கிறதே


காதல் துளிர்விட
வாழ்க்கை இனிக்குதே
உந்தன் பார்வை
என்னில் விழவே!

மெல்ல இனிவரும்
காலம் கரையுதே
உந்தன் வழி
நடந்திடவே!

இதயம் பறிக்கும்
புன்னகை போதும்
உயிரை கொல்லும்
உன் இதழ் போதும்

உந்தன் அழகினிலே
உலகம் மறக்கிறதே....

எங்கே போகிறது என் நாடு


கூத்தாடிகளுக்கு
பாலூற்றி
கோவில் கட்டி
கொண்டாடும் மூடர்கள்

வலைதளங்களில்
ஆபாச தேடல்கள்
காணும் காமுகர்கள்

ஏழைகளின் பிரச்சனையை
காட்டி அரசியல்
நடத்தும் ஆட்கொள்ளிகள்

அ முதல் ஃ வரை
உள்ள எல்லாவற்றிலும்
சுருட்டும் ஊழல் பெருச்சாளிகள்

காதல் என்ற பெயரில்
விரக தாபம் தீர்க்க
மறைவான இடம் தேடும்
மார்கழி மாத நாய்கள்

விளை நிலங்களை
விலை நிலங்களாக
கையகப்படுத்திய வியாபாரிகள்

இன்னும் பல
அவலங்களை
வேடிக்கை மட்டுமே பார்க்கும்
ஒன்றுக்கும்
உதவாத ஜென்மங்கள்

எங்கே போகிறது
என் நாடு...

பாலைவனம்


செழித்து வளர்ந்த
விளை நிலமாய் நான்

உன் பார்வை பட்டு

மீத்தேன் குழாய்
இறக்கப்பட்டு
காய்ந்து கிடக்கும்
பாலைவனமாக....

போதி மரம்


நீ
ஊஞ்சலாடும்
ஒவ்வொரு மரமும்
என் காதல்
போதி மரமே...

நிழல்


நீ
உன்
நிழல்
பார்த்து
நடக்காதே

நான்
உன்னை
பின்
தொடர்வது
தெரிந்துவிடும்

பயம்


பயமாய் தான் இருக்கிறது
உன்
கண்களை
நேராக பார்க்க

எங்கு
உன்னுள்
சிறை பட்டு
விடுவேனோ
என்று !!!

வெற்றி கனி


கவலை படு
தோல்விகள்
பெறவில்லை என்று

அப்போது தான்
வெற்றியின்
கனிகள்
புளித்து போகாது

காதல் தோல்வி


காதல் தந்த
தோல்வியால்
காற்றும் கூட
எரியுதே!
வலிக்குதே!!!
உயிரினை
அறுக்குதே!!

காலமெல்லாம்
வாடினேன்
தீயே இன்றி
வேகிறேன்
வாழ்கையில்
நிம்மதி
போனதே!
என் மதி!!!!!!

இழப்பு


சாதிக்க,
முடிந்தவரை
சாகடிப்போம்
பல சந்தோசங்களை!!!

கண்ணீர்


உன்
விழி நீரின்
துளி ஒன்று
என்
நெஞ்சை பிளக்க!!!

அந்த
வலியோடு
என் நிகழ்
ஜென்மம்
அதை நான்
தொலைக்க!!!!!

தவம்


பசி ஒன்று எடுத்தாலும்
உண்ண மறுக்க!
உன் முகம் காணா
இரவோடு சண்டை பிடிக்க!
பூவோடும் நிலவோடும்
நாட்கள் கழிக்க!
உன் பார்வை
என் மீது என்று படர?
அதற்காக
தவம் பூண்டேன்
இந்த ஜென்மம் தொலைக்க!!!

காதல் வந்தது


பிறந்திடும்
ஒவ்வொரு வார்த்தையும்
உனக்கென கொண்டு
எழுதி நான்
வைத்தேனே அடிக்கடி
உன்முகம் கண்டு!!!

புதுபுது
வலிகளும் மனதினில்
வந்தது ஏனோ?
விழி உன்னை
காணாத நாட்களில்
தவிப்பதால் தானோ!!!

காலமெல்லாம் காத்திருந்தேன்
கண்மணியே உன் வழியில்

பூமியெங்கும் பூத்திருக்கும்
பூக்களெல்லாம் உன் முகமே

விழிகள் கொண்டாடும் அழகே
தினமும் உருகாதோ மனதே

தோகை விரித்தாடும் மயிலே
தினமும் பொழியாதோ மழையே

எண்ணம் உன்னோடு
என்றும் அன்போடு
உன்னை சுற்றியே திரியும்!!!

பார்வை


நீ
என்னை
பார்த்தும் பார்க்காமல் போ

ஏனென்றால்

நீ பார்த்தால்
எனை மறந்திடுவேன்

பார்க்காவிடில்
இறந்திடுவேன்

Sunday 18 January 2015

பஞ்சம்


ச்சே....
இந்த காதலிலும்
பஞ்சம் வந்துவிட்டது!

ஆம்....
உன்னை வர்ணிக்க
வார்த்தைகள்
கிடைக்கவில்லை!!!